ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க NPP முயற்சி: மொட்டு தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமானது இலங்கைக்குள் ஒற்றைக் கட்சி ஆட்சியை அமைப்பதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான பின்னணியை உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரவீந்திர ஜெயசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கருத்தியல் நடவடிக்கை
இவ்வடிப்படையிலான கருத்தியல் நடவடிக்கை மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பெலவத்தை பிரதான அலுவலகத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் அபாயகரமான போக்கொன்று உருவாகி வருவதாகவும் இந்த ஆபத்தான நிலைமை குறித்து நாட்டின் மக்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் திட்டமிட்ட முறையில் ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கிய அரசியல் நகர்வுகளை மிக நுணுக்கமாக முன்னெடுத்து வருகின்றன.
அரசாங்க அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக வெளியிடும் அறிக்கைகளின் உண்மையான நோக்கம் இந்த ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைப் பெருமையுடன் அடையாளப்படுத்தும் ஜனாதிபதி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிதியடிகளாக சித்தரித்ததாக நினைவூட்டிய அவர், நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக மாற்றும் செயல் பெலவத்தை அலுவலகத்தின் திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |