தீபாவளி தினத்தில் நாட்டின் பல ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள்
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளித் திருநாளான இன்று (08) நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சைவ ஆலயங்களில் இவ்வாறு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
தீபாவளி தினமான இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பொழிந்த போதிலும் மக்கள் ஆலய வழிபாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் பெருமளவான மக்கள் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
செய்திகள் - த. பிரதீபன்
கிளிநொச்சி
தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயம், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயம், மீனாட்சி அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும் கேதாரா கௌரி விரத இறுதி பூஜை வழிபாடு பக்திபூர்வமாக நடைபெற்றது.
தீபாவளி சிறப்பு வழிபாடுகளும், கேதார கௌரி காப்பு கட்டும் பூஜைகள் வழிபாடுகளுக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஆலயத்துக்கு பொதுமக்கள் வந்து வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

செய்திகள் - சிவா
திருகோணமலை
தீபாவளித் திருநாளை முன்னிட்டு திருகோணமலை - கிண்ணியா ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் ஆலயத்தில் இன்று (08) காலை விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
இன்று காலை 8.30 மணியளவில் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விசேட பூஜை வழிபாடுகளில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் இடம்பெற்றதுடன், பக்தர்களும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
தீபாவளித் திருநாளின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்வழிபாடுகள், பக்தர்களிடையே ஆன்மீக உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின.
இதன்போது பக்தர்கள் தங்களது குடும்பங்களின் நலன், சுபீட்சம், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்வுக்காக இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

செய்திகள் - ஹஸ்பர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |