அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்!
அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இறக்குமதி பொருட்கள்
“பொருளாதார ரீதியில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முக்கியமானது கைத்தொழில்துறை. ஆனால் எமது நாட்டில் இறக்குமதிப் பொருட்களையே நம்புவதால் கைத்தொழில்துறை ஆரோக்கியமான நிலையில் இல்லை.
அதனால் கைத்தொழித்துறை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. தென்பகுதியிலுள்ள கைத்தொழில் துறைகளில் மட்டும் அமைச்சர்கள் அதிக அக்கறை எடுத்து முன்னேற்றுகின்றனர்.
எனவே விடயத்துடன் சமபந்தப்பட்ட அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணவீர மற்றும் சாமர சம்பத் ஆகியோர் வடக்கு மாகாணம் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமான கைத்தொழில் துறைகள் இருந்தன. இப்போது அனைத்தும் செயலிழந்துள்ளன.
குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலையிலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித்தொழிற்சாலை என்று அலுமினியத்திலிருந்து தேங்காய் எண்ணெய்த் தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை வரை பல தொழிற்சாலைகள் இருந்தன.
ஆனால் இன்று இவை இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் முடிந்த 14 வருடங்களாகி விட்டபோதும் இவ்வாறான தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. இங்கு ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.
உப்பளம் தொழிற்சாலை மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க நாம் பலமுறை கேட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
வேலைவாய்ப்புகள்
இவற்றை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேலைவாய்ப்பு அவசியம். இவற்றுக்கு அரசிடம் நிதி இல்லை என்றால் முதலிடுவதற்கு வடக்கு, கிழக்கில் உள்ள பலர் தயாராகவுள்ளனர்.
ஆனால் இதுதொடர்பில் அரசிற்கு அக்கறை இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அரச தொழிற்சாலைகள் இல்லை ஆனால் அதன் தலைமையகங்கள் மட்டும் உள்ளன. அமைச்சுகளிலும் அதற்கான பிரிவு உள்ளது.
உதாரணமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இல்லை. ஆனால் அதன் தலைமையகம் உள்ளது. பரந்தன் இரசாயன தொழிற்சாலை நிலையும் அதுதான் தொழிற்சாலையில்லை. ஆனால் அதற்கு அமைச்சில் ஒரு பிரிவு உள்ளது. ஒரு தலைவர் இருக்கின்றார் . அவருக்கான வாகனம் வழங்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கில் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது என்ற பெயரில் அரசியல் ரீதியாக தலைவர் நியமிக்கப்படுகின்றார்.
ஆளணி உள்ளது. அவர்களுக்கு சம்பளம், வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொழிற்சாலைகளும் இல்லை. அவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் இல்லை.
இதனால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றது. அதிலும் வடக்கு, கிழக்கு என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ்வாறான அரச தொழிற்சாலைகளை மீண்டும் வடக்கு, கிழக்கில் தொடங்காமல் இருக்க இவர்களுக்கு வேறுதரப்புக்களினால் பெருமளவு பணம் வழங்கப்படுவதாகவும் மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
இந்த சந்தேகத்தை இல்லாது செய்ய வேண்டுமானால் மீண்டும் அந்த தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலீட்டாளர்கள் தேவை என்றால் அவர்களை வழங்க நாம் தயார்.
அவ்வாறு ஆரம்பிக்கப்போவதில்லை என்றால் அவற்றுக்காக அமைச்சுக்களில் உள்ள அலுவலகங்களை மூடிவிட்டு அதன் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு அந்த பணத்தை வேறு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |