செம்மணியில் ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை!
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்றைய தினம் (04.08.2025) முன்னெடுக்கப்பட்டது.
ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கேன் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை.
இந்தநிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜி.பி.ஆர். ஸ்கேனர்
அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அங்கத்தவர்கள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயம் இன்றைய (04.08.2025) தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா மற்றும் கலாநிதி கெஹான் தினுக் குணதிலக்க ஆகியோர் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
அவர்கள் புதைகுழி இடத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்து தடயவியல் நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











