யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை பெய்ய கூடிய வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (25.05.2025) அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இடி மின்னலோடு இணைந்ததாகவே இந்த மழை கிடைக்கும்.
அதேவேளை எதிர்வரும் 27.05.2025 அன்று வங்காள விரிகுடாவில் பங்களாதேஷிற்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது.
ஆனாலும் இந்த நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.”என தெரிவித்துள்ளார்
இடியுடன் கூடிய மழை
இதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
