அதிக விலைக்கு சம்பா அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையால் நேற்று (28.04.2026) கொழும்பு 11, ஐந்தாவது குறுக்கு வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தையில் 5 கிலோகிராம் சம்பா அரிசி பொதி ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு 240 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வர்த்தகர் அதனை 285 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று (28) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட வர்த்தகர் இதற்கு முன்னரும் இருமுறை இதே போன்ற குற்றங்களைச் செய்து தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு, 200,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |