ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம்: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்
ஈரானுடன் ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) முழுமையாக ஒப்படைப்பது உட்பட அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் தெஹ்ரான் இணங்கியுள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.
இது பல வாரங்களாக நிலவி வந்த போர்ப் பதற்றத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
போர்நிறுத்தம்
ஒருவேளை இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் அதன் கையெழுத்திடும் நிகழ்விற்காகத் தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு நேரில் செல்லக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவடையும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு முன்னதாகவே இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால் போர்நிறுத்தக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்து முடக்கம்
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை ஏற்படுத்தியுள்ள கப்பல் போக்குவரத்து முடக்கம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அது ஈரானுக்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு எச்சரிக்கையையும் ட்ரம்ப் விடுக்கத் தவறவில்லை என்பதுடன் இந்த ஒப்பந்தம் தோல்வியடையும் பட்சத்தில் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் ஏற்கனவே சில அடிப்படை இணக்கப்பாடுகளை எட்டியுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையிலும் பிராந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |