போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் யுனிசெப்!
ஐ.நாவின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனமான யுனிசெப், உக்ரைனின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து அவர்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக உதவி கரம் நீட்டியுள்ளது.
இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனின் 10 மாவட்டங்களின் மாணவர்கள் படிப்பதற்கு உதவும் வகையில் 29,000 மடிக்கணனிகளை வழங்கியுள்ளது.
மடிக்கணனிகள் வழங்கிவைப்பு
போரின் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளின் கல்வியுரிமையை வலியுறுத்தும் விதமாக, இணையதள வகுப்புகளுக்கு உதவும் வகையில் 29,000 மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
மடிக்கணனிகளை வாங்குவதற்கும் அவைகளை விநியோகம் செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மன், பின்லாந்து, ஜப்பான், கொரியா ஆகியவைகளுடன் இணைந்து, செயற்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் உள்ள குழந்தைகள், பெற்றோரின் கவனிப்பின்றி விடப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு இம்மடிக்கணனி உதவியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து மூன்று மாதங்களில் மேலும் ஏறக்குறைய 40 ஆயிரம் மடிக்கணனிகள் ஏனைய மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் யுனிசெப் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |