உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவி: குறிவைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் முக்கிய இலக்குகள்
உக்ரைனுக்கு (Ukraine) டொமாஹாக்ஸ் ஏவுகணைகளை வழங்கவும் மற்றும் ரஷ்யாவுக்குள் (Russia) நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா (United States) பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டாக தொடர்கின்றது.
போரை நிறுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.
மோதல் முடிவு
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin), அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) பேச்சு நடத்தினார்.
இருப்பினும், மோதல் முடிவுக்கு வரவில்லை என்ற அடிப்படையில், உக்ரைனுக்கு டொமாஹாக் ஏவுகணைகளை வழங்கவும் மற்றும் ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குதல் நடத்த தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருசதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது இதுவே முதல்முறை எனவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
எண்ணெய் வளங்கள்
இதன் வாயிலாக, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய் வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவது எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நீடித்த மோதலுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளதால் அதை தகர்ப்பதற்கு குறி வைக்கப்படுகின்றது.
ரஷ்யாவுக்கான வருவாயை கட்டுப்படுத்தினால், உக்ரைன் உடனான போரை புடின் முடிவுக்கு கொண்டு வருவார் என ட்ரம்ப் கருதுவதால் இது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஒத்துழைப்பு
இதன் ஒருபகுதியாக, நீண்ட துார தாக்குதல்களில் உக்ரைனுக்கு உதவ உளவுத்துறை அமைப்புகளையும் மற்றும் தன் இராணுவத்தையும் அனுமதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்ற ஆதரவை, நேட்டோ எனப்படும் மேற்கத்திய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளும் வழங்க வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்க பரிசீலிக்கப்படும் டொமாஹாக்ஸ் ஏவுகணை 2,500 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இது மாஸ்கோவையும் மற்றும் ரஷ்யாவின் மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
