அமெரிக்காவின் அடாவடித்தனம்! உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு
உலகின் இரண்டு மாபெரும் வல்லரசுகளை கிட்டத்தட்ட நேரடியாகவே சண்டைக்கு வலிந்து இழுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஒன்று ரஷ்யா மற்றையது சீனா.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை கொம்பு சீவி விட்டது மாத்திரமல்ல, கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யாவுடன் சண்டை இடுவதற்கான ஆயுதங்கள் அத்தனையையும் அள்ளி இறைத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.
மறைமுக போர் பிரகடனம்
அதேபோன்றுதான் சீனாவுக்கும். சீனா உரிமை கொண்டாடி வருகின்ற தாய்வனுக்கு ஆயுத தளபாடங்களை வகை தொகை இன்றி வழங்கி வருவது மாத்திரமன்றி, தாய்வானை அடிப்படையாக வைத்து ஒரு வகையான போர் பிரகடனத்தைக் கூட மறைமுகமாக சீனா மீது மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா.
உலக வல்லரசுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த ஸ்தானங்களில் இருக்கின்ற ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக பகிரங்கமாக செயற்பட்டு அந்த இரண்டு தேசங்களையும் சினம் கொள்ள வைத்து, இரண்டு வல்லரசுகளையும் சமகாலத்தில் போருக்கு வலிந்து இழுக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற அமெரிக்காவின் செயல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் காய் நகர்த்தல்கள்
ஏன் அமெரிக்கா இது போன்ற காரியங்களைச் செய்கின்றது.?
உக்ரைன் விவகாரத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், எதற்காக சீனாவையும் சீண்டி வலிந்திழுத்து தேவையில்லாத ஒரு பிரச்சினையை ஆசியாவில் அமெரிக்கா எதிர்கொள்கின்றது.?
சமகாலத்தில் ரஷ்யாவையும் சீனாவையும் எதற்காக அமெரிக்கா சண்டைக்கு இழுக்கின்றது.?
ஒரே நேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் போருக்கு என்று புறப்பட்டு விட்டால், அழிவு அமெரிக்காவுக்கு மாத்திரம் அல்ல - அது முழு உலகக்கும் தான்.
அப்படி இருக்க அமெரிக்கா ஏன் இது போன்று முட்டாள்தனமாக நடந்து கொள்கின்றது? சாதாரண மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, அமெரிக்க ஆதரவாளர்கள் மனங்களிலும் நிழலாடிக் கொண்டிருக்கின்ற கேள்விகள் தான் இவை.
இவ்வாறாக, இலகுவில் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்ற அமெரிக்காவின் காய் நகர்த்தல்களின் பின்னணி பற்றித் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நாம் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.