மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி!
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (02.05.2026) அதிகாலை சுரவணையடியூற்று கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 55 வயதுடைய தயானந்தராசா வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுரவணையடியூற்று கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை உட்புகுந்துள்ளது.
இந்தநிலையில் உயிரிழந்த பெண்ணின் காணியினுள் ஏதோ சத்தம் கேட்பதை அவதானித்த அவர் வெளியில் வந்து பார்த்தபோது அங்கு நின்ற காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பரிசோதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறப் பகுதிகளான போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் நீண்டகாலமாக அதிகரித்து வருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |