நகைக்கடையில் ஸ்ப்ரே தெளித்து திருட முயன்ற பெண்!
ஹட்டன் (Hatton) நகரில் நகைக் கடை ஒன்றில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க மாலையை திருட முயன்ற, பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 1ஆம் திகதி ஹட்டன் வந்த குறித்த பெண், நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது, பெண்ணின் இடது கை அவரது கைப்பைக்குள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார்.
நகையை திருடிய பெண்
அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து திரவ போத்தலொன்றை எடுத்து கடை உரிமையாளரின் மீது தெளித்துள்ளார்.
எனினும், கடை உரிமையாளர், குறித்த பெண்ணை கட்டுப்படுத்தி, அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
தனது தந்தையின் சிகிச்சை செலவுக்காகவே இவ்வாறு செய்ததாக காவல்துறையிடம் நகையை திருடிய பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நீதவான் உத்தரவு
இதையடுத்து கைது கைது செய்யப்பட்ட பெண்,ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் கடந்த 01ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், நாளையதினம் (05.08.2025) வழக்கை மீண்டும் விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், ஒரு குழந்தையின் தாய் ஆவார்.
குறித்த பெண், மஸ்கெலியா உப்காட் பகுதியில் சிறிது காலம் வசித்து வந்ததாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருவதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
