ஆதாரத்துடன் சிக்கிய துமிந்த! மீண்டும் சந்தேகநபராக அறிவிப்பு
வெள்ளவத்தை, ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட டி-56 ரக துப்பாக்கி தொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரை ஒரு குறிப்பிட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியதை அடுத்தே, இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமிந்தவின் கைது
முன்னதாக, இந்த ஆயுதத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அவர்கள் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், கடந்த 2025 மே மாதத்தில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
கூடுதல் ஆதாரங்கள்
எனினும், அதன்போது அவருக்கு எதிராகத் தொடர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தற்போது இந்த வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதால், அவர் மீண்டும் சந்தேக நபராக சேர்க்கப்பட்டு வழக்கின் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |