இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை பேசி உள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான எங்களுடைய நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் தெளிவாக முன்வைத்தோம்.
சட்டவிரோத கடற்றொழில்
அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை, அதன் பின்னர் கடற்றொழிலாளர்கள் மட்டத்திலும், இறுதியாக அமைச்சு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.

முதற்கட்ட அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தையில் கடல் மற்றும் மீன் வளங்களைப் பாதுகாப்பது, கடல் சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையால் இலங்கை அல்லது வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய கடற்றொழிலாள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கு கடற்றொழிலாள் கடல் வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஆனால், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் காரணமாக கடல் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.
கச்சத்தீவு தொடர்பான விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களும், இந்திய மத்திய அரசின் கருத்துக்களும் எங்களுக்கு ஆறுதலளிக்கின்றன.
இந்த விடயத்தில் எமது கடற்றொழிலாளர்களின் நலனையும் கடல் வளங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் எமது நிலைப்பாட்டை வலியுறுத்துவோம்.' என தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |