ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை தொடர்பான பாரதூர தன்மை : பதறுகிறார் சரத்வீரசேகர
ஜெனிவாவில் இலங்கை(sri lanka) தொடர்பான 46/1 தீர்மானத்தின் பாரதூரத்தன்மை அநுர அரசாங்கத்தக்கு புரியவில்லைபோல் தெரிகின்றது. சாட்சி திரட்டும் நடவடிக்கைகூட இடம்பெறுவதாக முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர(sarath weerasekara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தொடர்பான 8 போர்க் குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நாம் ஜெனிவா தொடரில் நிரூபித்துள்ளோம். ஆவணங்களையும் கையளித்திருந்தேன்.
ஜெனீவா அமர்வில் பஙகேற்க தயார்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா தொடர் ஆரம்பமாகின்றது. இதன்போது இலங்கை தொடர்பான போர்க் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்க வேண்டும்.
ஜெனிவா விவகாரம் தொடர்பில் அனுபவமுள்ள அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சில் இருக்கின்றனர். சிலவேளை எனக்கு அழைப்பு விடுத்தால் நானும் பங்கேற்க தயார். வெளிவிவகார அமைச்சுடனும் இது பற்றி பேச்சு நடத்தலாம் என்றார்.
கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது
இதேவேளை கச்சதீவு விவகாரத்தை இந்தியத் தரப்பு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருtதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. எந்த வளமும் அற்ற அந்தத் தீவில் ஒரு தேவாலயம் உள்ளது. கடற்றொழிலாளர்கள் தமது வலைகளை உலரவைப்பதற்கு அந்தத் தீவைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளைதான் கச்சதீவு விவகாரம் இந்தியாவில் பேசுபொருளாக மாறும். அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே அது தொடர்பில் பேசப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 800 முதல் 900 வரையான இழுவைப் படகுகள் வருகின்றன. இதன்மூலம் எமது கடல்வளம் நாசமாகி வருகின்றது. பெரும் பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றது. எனவே, அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
