புதுக்குடியிருப்பில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஜனசபா அங்குராப்பண நிகழ்வு(படங்கள்)
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குராப்பண நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று(21.10.2023) காலை நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள அமைப்புக்களையும் ஏனைய இளைஞர் , யுவதிகளையும் உள்வாங்கி ஜனசபா செயற்குழுவில் 25 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ஜனசபா செயற்குழு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் ஜனசபா செயற்குழு முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட அங்குராப்பணமாகும்.
இதேபோல் ஏனைய மாவட்டங்களிலும் செயற்குழு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதன் போது கிராமங்களில் அதிகமாக போதைவஸ்து கஞ்சா , கசிப்பு காணப்படுவதாகவும், பாடசாலைக்கு மாணவர்கள் வீதிகளின் ஊடாக செல்வதில் அச்ச நிலமை ,வீதிகள் சீரின்மை, காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் சீர் வேண்டிய நிலமை காணப்படுவதாக அரச அதிகாரிகளிடம் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
கலந்து கொண்டவர்கள்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சிவராஜசிங்கம் ஜெயகாந், தேசிய ஜனசபா செயலக அதிகாரிகள், மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் கணேசமூர்த்தி ஜெயபவானி, புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் வே.மேகானந்தசிவம், புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.