சீனாவின் பிடிவாதம் அண்டை நாடுகளுக்கு பாரிய சவால் : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
ஒத்த நிலைப்பாடுகளை கொண்டுள்ள நட்பு நாடுகளுடன் வலுவான கூட்டணி அமைக்கப்பட வேண்டும், அது பிலிப்பைன்ஸ், ஜப்பான்,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் இருக்கும் வலுவான முத்தரப்புக் கூட்டணி போன்றதாக இருக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினென்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு நேற்று (16) டோக்கியோவில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தென் சீன கடல் விவகாரம்
“தென் சீனக் கடலில் பதற்றம் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது, தென்சீனக் கடல் தொடர்பில் பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனா அதன் அண்டை நாடுகளுக்குப் பாரிய சவாலாக உள்ளது.” என்றார்.
அத்துடன், கடந்த 10 ஆம் திகதி பிலிப்பைன்ஸ்,சீனா ஆகிய நாடுகள் தென்சீனக் கடலில் உள்ள ஆழம் குறைவான கடற்பகுதியில் தமது கப்பல்கள் மோதிக்கொண்டது குறித்து ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக்கொண்டன.
இந்த முக்கியமான ஆழம் குறைந்த கடற்பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.
இதனை தவிர, ஆசியான் உறுப்பு நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா,மலேசியா,புருணை ஆகிய நாடுகளும் சீனா உரிமை கொண்டாடும் தென் சீனக் கடலில் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.
வருடாந்த கப்பல் வர்த்தகம்
தென் சீனக் கடலில் அமைந்துள்ள டிரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருடாந்த கப்பல் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் வழித்தடம் தனக்கே சொந்தம் என சீனா கூறிவருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் நிரந்தர நடுவர் நீதிமன்றம், சீனாவின் கோரிக்கைகளுக்கு ஆதாரபூர்வமான அடிப்படை காரணங்கள் இல்லை என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை அமெரிக்கா ஆதரித்தாலும் சீனா அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |