குருந்தூர் மலை விகாராதிபதியால் தமிழர் ஒருவருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மத ஆக்கிரமிப்பு சின்னமாக விளங்கும் குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட விகாரையில் தற்போது வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த நிலையில் குருந்தூர்மலை விகாராதிபதி குருந்தூர் மலைக்கு அருகில் உள்ள கிராமமான குமுழமுனை ஆறுமுகத்தான் குளம் எனும் கிராமத்தில் உள்ள தமிழ் குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
வீட்டுத்திட்டம்
ஆறுமுகத்தான் குளத்தில் உள்ள திலீபன் என்ற இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தினருக்கே இந்த வீட்டுத்திட்டம் கட்டி வைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையில் குருந்தூர்மலை விகாராதிபதி முகநூல் ஊடாக பௌத்த மக்களிடம் கோரியுள்ளார்.
குருந்தூர் மலை விகாரையான குருந்தி விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி அவர்களின் ஏற்பாட்டில் இந்த வீட்டுத்திட்டம் கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
பல எதிர்ப்பினையும் மீறி தமிழர்கள் இடத்தில் கட்டப்பட்ட குருந்தூர்மலை விகாரையில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தற்போது பௌத்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பௌத்த ஆதிக்கம்
அருகில் பௌத்தர்கள் எவரும் இல்லாத நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி அருகில் உள்ள ஆறுமுகத்தான் குளம் கிராமத்தில் வீடு இல்லாத மிகவும் கஸ்ரப்பட்ட குடும்பத்திற்கு வீட்டினை கட்டிக்கொடுப்பதன் ஊடாக தமிழர்களிடம் ஆதரவினை தேடும் நடவடிக்கையாக இதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு மக்கள் இருக்கின்றார்கள் இந்த மக்களுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் மெல்லமெல்ல பௌத்த ஆதிக்கம் தலைதூக்க தொடங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |