படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி யாழில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களால் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் (31) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கிலும் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
நிகழ்வைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள்
இந்த நிலையிலேயே, ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரியும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சரின் கருத்தரங்கைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது “அரச இயந்திரமே ஊடகவியலாளர்களை அடக்காதே“, “ஊடகப் படுகொலைக்கு நீதி வேண்டும்”, ”படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி எங்கே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் போாராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை தகவல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்
இதேவேளை பிரதி அமைச்சர் ஊடகவியலாளர்களை சந்திப்பதை தவிர்த்தது கருத்தமர்வில் பங்கேற்றதுடன் கருத்தமர்வில் ஒரு சில அரசசார்பு ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவளை போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் ஊடக பிரதி அமைச்சரை சந்திக்க யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டவேளை, காவல்துறையினர் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
தொடர்ந்து பிரதி அமைச்சருக்கு எதிராகக கோஷங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை மாவட்ட செயலக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


