கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு :கொலையா..!
மட்டக்களப்பு(batticaloa) மாவட்டம் வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை மாலை(27.05.2024) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நீதவான்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ரஞ்ஜித்குமார் முன்னிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை பார்வையிட்ட நீதவான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, காவல்துறை மோப்ப நாய் கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலத்தில் காயங்கள்
சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தம்பிராசா பதிராசா என்பவர் ஞாயிற்றுக்கிழமை(26.05.2024) வீட்டிலிருந்து புறப்பட்டவர் திங்கட்கிழமை மாலை வரையில் வீடு வந்து சேரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததோடு, காவல்துறையில் முறைப்பாடு பதிவு தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
இவ்வாறு உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |