சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாத மாவட்டம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 56 அதிகாரிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் விவாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் 56, முல்லைத்தீவில் 1,394, வவுனியாவில் 997, கிளிநொச்சியில் 1858, அநுராபுரத்தில் 7100, பொலன்னறுவையில் 2,772, மொனராகலையில் 2,812 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பதுளையில் 350, அம்பாந்தோட்டையில் 473, காலியில் 87, மாத்தறையில் 116, அம்பாறையில் 5077, மட்டக்களப்பில் 269, திருகோணமலையில் 4193, கொழும்பில் 825, கம்பஹாவில் 518, களுத்துறையில் 423, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று, கண்டியில் 703, மாத்தளையில் 114, குருநாகலில் 245, புத்தளத்தில் 638, இரத்தினபுரியில் 293, கேகாலையில் 109 அதிகாரிகளுமாக மொத்தமாக 31,422 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் இல்லை“ என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |