குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன்
தவெக அரசு தொடர்வதற்கு தனது ஆதரவு இருக்கும்" என சட்டப்பேரவையில் மன்னார்குடி அமமுக எம்எல்ஏ எஸ்.காமராஜ் தெரிவித்ததையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவரை டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்துள்ளார்.
தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள், தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், எஸ்.காமராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார்
அதில், "கட்சியின் நிலைப்பாட்டை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த 8-ஆம் திகதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த எஸ்.காமராஜை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக காமராஜ் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் விஜய், தமிழக ஆளுநரிடம் கடிதம் ஒன்றை சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து ஆளுநர் உடனான சந்திப்பின்போது, தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என ஆளுநரிடமே காமராஜ் தெரிவித்திருந்தாலும், நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |