வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள்
குறித்த வழக்கு இன்று (19.11) மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன், மேயர் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் கோரினர்.

இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
இவற்றை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்ட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயக தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவின் போது பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் எனவும் குறித்த இருவரும் அப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவுக்குமாறு கோரி இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |