சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி
சென்னையில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த மற்ற சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
கேளிக்கை விடுதி
இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருதரப்பினரையும் விடுதியின் பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது முரண்பாட்டில் ஈடுபட்ட தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
7 பேர் கைது
அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தின் பின்னர் அவர் சுயநினைவை இழந்திருந்ததாக வைத்தியர்கள் கூறியிருந்தனர். இந்நிலையிலே குறித்த சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த கேளிக்கை விடுதிக்கு முத்திரையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்