யாழ் நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகக் போராட்டம்
நெல்லியடியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (12) யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மது போதைக்கு எதிரான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன்போது, நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மகஜர், மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
நெல்லியடியில் புதிய மதுபானசாலை
குறித்த மகஜர், மேலதிக நடவடிக்கைக்காக மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மதுபானசாலைகளின் அதிகரிப்பால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை வெளியிட்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களின் எதிர்ப்பையும் சமூக நலனையும் கருத்திற்கொண்டு, நெல்லியடியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


