இலங்கையில் மீண்டும் கொரோனா நடைமுறைக்கு ஆய்வு - இந்தியாவின் முன்னெச்சரிக்கையால் அரசாங்கம் விழிப்பு
சீனாவில் பரவி வரும் புதிய ஒமைக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நாளாந்தம் பெற்றுக்கொள்ளப்படும் கொரோனா மாதிரிகள் தொடர்பான ஆய்வுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுமாற்று பரிசோதனை

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் எழுமாற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பரிசோதனைகளின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனைக்கூடம் மற்றும் சிறி ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினூடாக மேலும் ஆய்வுக்குட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு

அத்துடன், இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொடுப்பனவுகளில் நிலவும் தாமதமே இதற்கு காரணமெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், தேவைக்கேற்றவாறு மருந்து விநியோகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.