ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்! புடினின் எதிர்பாரா எச்சரிக்கை
எதிர்வரும் ஜனவரியில் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புடின்(Vladimir Putin) எச்சரித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தானில் நடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ட்ரம்பிற்கு எதிராக முற்றிலும் நாகரீகமற்ற முறைகள் பயன்படுத்தி பிரசாரம் செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இருக்கக்கூடாது.
ட்ரம்பின் பாதுகாப்பு
ஆனால், ட்ரம்ப்பை எதிர்ப்போர் அவரை படுகொலை செய்யவும் முயன்றுள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது என்னைக் கேட்டால் ட்ரம்ப் பாதுகாப்பாக இல்லை என்றே கூறுவேன்.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் வரலாற்றில் பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன.
ட்ரம்ப் புத்திசாலி என்று நான் நினைக்கிறேன். எனவே, அவர் தனக்கு இருக்கும் ஆபத்துகளைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன்.
தேர்தல் பிரசாரம் என்பது அரசியல் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், எதிர் தரப்பினர் ட்ரம்பின் குடும்பத்தினர், குழந்தைகள் குறித்ததெல்லாம் மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். இது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
பைடனின் அனுமதி
மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வாக்குகளைப் பெறவே இதுபோல செய்கிறார்கள். ரஷ்யாவில் எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயம் நடக்காது.
ரஷ்யாவுக்கு எதிராக தங்கள் நாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்த தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் அனுமதியள்ளமை தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் உதவுவதாகக் கூறியிருக்கிறார்.
இப்போது தீவிர தாக்குதலுக்கு அனுமதி அளித்தால் ட்ரம்ப் வந்த அதை நிறுத்துவது போலக் காட்டி, பிரச்சினையை அவர்கள் முடிக்கலாம். இதற்கான திட்டமாகக் கூட அது இருக்கலாம். " என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |